குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த தனி சட்டம்
குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநில ஆணைய தலைவர் சரஸ்வதி பேசினார்.
ஊட்டி
குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநில ஆணைய தலைவர் சரஸ்வதி பேசினார்.
பாதுகாப்பு குழு கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு பணிகளை தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் மேற்கொண்டனர். தொடர்ந்து தெப்பக்காடு, ஆனைக்கட்டி ஆகிய 2 இடங்களில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டங்கள் நடைபெற்றது. கூடலூர் தாலுகா கார்குடி கிராமத்தில் அரசு உண்டு உறைவிடப்பள்ளில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி பேசியபோது கூறியதாவது:-
தமிழக அரசின் சமூக நலத்துறை அரசாணைப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 வகையான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும்.
குழந்தைகளின் உரிமைகள்
நகர்ப்புறங்களில் மண்டல அளவிலும், நகராட்சி அளவிலும், பேரூராட்சி அளவிலும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஊரக பகுதிகளில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழு, வட்டார குழந்தை பாதுகாப்பு குழு, கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு அமைத்து செயல்பட வேண்டும். இத்தகைய குழுக்களை வலுப்படுத்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளின் குழந்தை பாதுகாப்பு குழுக்களையும், வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களையும், நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களையும் வலுப்படுத்தினால் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
வலுப்படுத்த சட்டம்
மேலும் சில குழந்தை பாதுகாப்பு இல்லங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆய்வு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத மாவட்டமாகவும், குழந்தைகள் குற்ற செயல்களில் ஈடுபடாத மாவட்டமாகவும் திகழ தேவையான நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்கிறது. குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஆணைய உறுப்பினர்கள் வீ.ராமராஜ், மல்லிகை செல்வராஜ், சமூக நலத்துறை திட்ட அலுவலர் தேவகுமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story