தேயிலைத்தூள் சந்தையை வலுப்படுத்த இன்கோசர்வுக்கு வாய்ப்பு கிடைக்கும்
பன்னாட்டு கூட்டமைப்பில் அங்கம் வகித்தால் தேயிலைத்தூள் சந்தையை வலுப்படுத்த இன்கோசர்வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஆசிய பசிபிக் மண்டல இயக்குனர் பேசினார்.
ஊட்டி
பன்னாட்டு கூட்டமைப்பில் அங்கம் வகித்தால் தேயிலைத்தூள் சந்தையை வலுப்படுத்த இன்கோசர்வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ஆசிய பசிபிக் மண்டல இயக்குனர் பேசினார்.
மண்டல இயக்குனர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் தொழில் வணிகத்துறையின் கீழ் இன்கோசர்வ் கட்டுப்பாட்டில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளது. இன்கோசர்வ், விரிவாக்கத்தின் மூலம் பன்னாட்டு கூட்டுறவு கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்ந்து பதிவு செய்து கொண்டது.
இந்த நிலையில் பன்னாட்டு கூட்டுறவு கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் மண்டல இயக்குனர் பாலசுப்பிரமணியன், கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தேயிலைத்தூள் தயாரிக்கப்படும் விதம், ரகங்களின் தரம், பேக்கிங் முறை ஆகியவற்றை பார்வையிட்டார். தொழிற்சாலையில் உறுப்பினராக உள்ள சிறு தேயிலை விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆலோசனை கூட்டம்
மேலும் தொழிற்சாலையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ள சுற்றுப்புறச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை பாராட்டினார். தொடர்ந்து குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மண்டல இயக்குனருக்கு, இன்கோசர்வின் நோக்கம் மற்றும் பணிகள் குறித்த காணொலி காண்பிக்கப்பட்டது.
அப்போது தேயிலைத்தூள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதலில் ஏற்படும் சவால்கள் மற்றும் அதன் பிரச்சினைகள் குறித்து விவரிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆசிய பசிபிக் மண்டல இயக்குனர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:-
சந்தையை வலுப்படுத்த வாய்ப்பு
பன்னாட்டு கூட்டுறவு கூட்டமைப்பானது உலகளவில் உள்ள கூட்டுறவு இணையங்களை ஒருசேர கூட்டமைப்பதை தனது தலையாய கொள்கையாக கொண்டு செயல்படுகிறது. கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டமைப்பு, தற்போது உலகளவில் 11 நாடுகளில் உள்ள 3 மில்லியன் கூட்டுறவு அமைப்புகளை ஒருங்கிணைத்து இணையங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
இதில் இன்கோசர்வ் அங்கம் வகித்தால் சிறந்த எதிர்காலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உலகளவில் தனது தேயிலைத்தூள் சந்தையை வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பன்னாட்டு கூட்டமைப்புடன் இன்கோசர்வ் கைகோர்த்து உலக அளவில் பல சாதனைகளை காணும். கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளிலும் தனது பங்களிப்பை முழுவதுமாக வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் இன்கோசர்வ் ஆலோசகர் ஸ்ரீராம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story