கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தில் 2,598 பேருக்கு சிகிச்சை-கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தில் 2,598 பேருக்கு சிகிச்சை-கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2021 9:21 PM IST (Updated: 31 Oct 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2,598 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி:
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருமுன் காப்போம் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பன்முனை மருத்துவ பரிசோதனை, கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து வசதி அதிகமில்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முகாமிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படுகிறது. மேலும் தொடர் சிகிச்சை தேவைப்படின், நோயின் தன்மையை பொருத்து எந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்ற விபரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் முகாம் வாரியாக கணினியில் பதியப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
2,598 பேருக்கு சிகிச்சை 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-2022-ம் நிதியாண்டில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 30 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த 12-ந் தேதி பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 1040 நோயாளிகளுக்கும், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராயக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மருத்துவ முகாமில் 476 நோயாளிகளுக்கும், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் 1,082 நோயாளிகள் என மொத்தம் 2,598 நபர்கள் சிகிச்சை பெற்றனர்.
இதில் மேல்சிகிச்சை தேவைப்பட்ட 31 நபர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணை, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story