திண்டுக்கல்லில் பரவலாக மழை
திண்டுக்கல்லில் நேற்று பரவலாக மழை பெய்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. பின்னர் நேற்று அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்ய தொடங்கியது. மதியம் 2 மணி வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.
அதன் பின்னர் அது பலத்த மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் நாகல்நகர், பஸ் நிலைய சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு சென்றனர். விடுமுறை நாள் என்றாலும் தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக திண்டுக்கல் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொட்டும் மழையில் நனைந்தபடி அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். பகல் முழுவதும் நீடித்த மழையால் சாலையோரத்தில் தற்காலிக கடைகளை அமைத்து துணி, வீட்டு உபயோக பொருட்கள், இனிப்புகளை விற்பனை செய்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கவலையோடு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story