திருவெண்ணெய்நல்லூர் அருகே சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரசூர்,
முட்புதரில் வீசப்பட்ட உண்டியல்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் ஒட்டனந்தலீஸ்வரர் என்கிற சிவன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவில் பூசாரி மற்றும் நிர்வாகிகள் பூஜைகளை முடித்து விட்டு, கோவிலை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்ததோடு, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிவிட்டு, அந்த உண்டியலை வயல்வெளிப்பகுதியில் உள்ள முட்புதரில் வீசி விட்டு சென்றனர்.
போலீஸ் விசாரணை
நேற்று காலை அந்த வழியாக விவசாய பணிக்கு சென்ற தொழிலாளர்கள் கோவில் உண்டியல் முட்புதரில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, இதுபற்றி கோவில் நிர்வாகிகள் புருஷோத்தமன், சண்முகம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடைபெற்ற கோவில் மற்றும் உண்டியல் கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் கோவில் மற்றும் உண்டியலில் பதிவாகி இருந்த மர்மநபா்களின் கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு நடந்த இந்த கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story