திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்மாற்றிகளை உடைத்து ரூ.8 லட்சம் தாமிர கம்பி திருட்டு
மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தில் 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, விவசாய மின் மோட்டார்களுக்கும், குடியிருப்புகளுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் 2 மின்மாற்றிகளையும் உடைத்து, அதில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ், இளநிலை பொறியாளர் சீனிவாசன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் தலமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடைக்கப்பட்ட மின்மாற்றிகளை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக திருவெண்ணெய்நல்லூர் பகுதி கிராமங்களில் உள்ள விவசாய மின்மோட்டார்களில் உள்ள மின்ஒயர்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள தாமிர கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் செல்வதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு, பொருட்கள் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே மின்மோட்டார், மின்மாற்றிகளில் இருந்து தாமிர கம்பிகளை திருடிச் செல்லும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story