ரூ.200 கோடி செலவில் கடலூர்- விருத்தாசலம் சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்ட பணிகள் அதிகாரி நேரில் ஆய்வு
ரூ.200 கோடி செலவில் கடலூர்- விருத்தாசலம் சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்ட பணிகளை அதிகாரி நேற்று ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
கடலூர்-விருத்தாசலம் சாலை தற்போது இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் ரூ. 200 கோடி மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதற்காக சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப் பட்டு வருகின்றன.
சாலையை அகலப்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கடலூரிலிருந்து சின்னசேலம் கூட்டு ரோடு வரை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரும் பணிகளை நியூ டெல்லி மத்திய தரைவழி அமைச்சகத்தின் தலைமை பொறியாளர் மண்டல் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.37 கோடியில் பாலம்
இதில், கடலூரிலிருந்து வேப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் அண்ணவல்லி, சுப்பிரமணியபுரம், டி.பாளையம், தோப்புக்கொல்லை, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், குறவன்குப்பம், ஊ.மங்கலம், விளாங்காட்டூர், பரவலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விபத்துக்களை தடுக்கவும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் விருத்தாசலம்-கடலூர் சாலையில் புறவழிச்சாலை பிரியும் இடத்தில் புதுக்கூரைப்பேட்டையிலிருந்து பெரியார் நகர் செல்லும் வழியில் உயர்மட்ட மேம்பாலம் ரூ. 37 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் அமைவதற்கான வரைபடத்தையும் அவர் ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
ஆய்வின் போது, தமிழ்நாடு, புதுச்சேரி மத்திய தரைவழி அமைச்சகத்தின் மண்டல அலுவலர் ரன் அஜய் சிங், சென்னை தேசிய நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் பாலமுருகன், சென்னை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story