விவசாயிகள் ஒருங்கிணைப்பு விழா


விவசாயிகள் ஒருங்கிணைப்பு விழா
x
தினத்தந்தி 31 Oct 2021 10:38 PM IST (Updated: 31 Oct 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் கிசான் கோத்தீஸ் விவசாயிகள் ஒருங்கிணைப்பு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் கிசான் கோத்தீஸ் விவசாயிகள் ஒருங்கிணைப்பு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
பயிற்சி
ராமநாதபுரம் திருப்புல்லாணி வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திரதின விழாவினை கொண்டாடும் விதமாக விவசாயிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்  பயிற்சி நடத்தப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குனர் முனைவர். டாம்பிசைலஸ் தலைமை தாங்கினார். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கண்ணையா, ஆலங்குளம் ஊராட்சி தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக இந்தநிகழ்சி நடத்தப்படுகிறது என்றார் மற்றும் விவசாயிகளுக்கு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும் விளக்கி பேசினார். 
வேளாண் துணை இயக்குனர் கண்ணையா விவசாயிகளுக்கு நன்மை தரும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிதல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார்.
உர நிர்வாகம்
திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமர்லால் விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில், களைகளின் வகைகள், களைகளை கட்டுபடுத்தும் முறைகளை விவசாயி களை வயல்வெளிக்கு நேரடியாக அழைத்துச் சென்று, அகன்ற இலை, களைகள், புல்வகை களைகள் மற்றும் கோரை இலை களைகளை கண்டறிதல், கட்டுப்படுத்துதல் மற்றும் களைகொல்லிகளின் வகைகள், பயன்படுத்தும் முறைகள், உரநிர்வாகம் குறித்து வயல்வெளியில் விளக்கி கூறினார். 
வேளாண் வணிக அலுவலர் உலகுசுந்தரம் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை நிகழ்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சேகரித்து வைப்பது, தங்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை வரும் காலத்தில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கலாம் என கூறினார். 
ஏற்பாடு
வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை முறை சார்ந்த அரசு நலதிட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சி முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரங்கநாதன், உதவி வேளாண் அலுவலர் பழனிமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story