வரலாறு காணாத விலை உயர்வு: குமராட்சியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.64-க்கு விற்பனை
வரலாறு காணாத விலை உயர்வு காரணமாக குமராட்சியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.64-க்கு விற்பனையானது.
கடலூர்,
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனாவையொட்டி உற்பத்தியை குறைத்துக்கொண்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள், தற்போது தேவை அதிகரித்த போதும், எண்ணெய் உற்பத்தியை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. இது தவிர மத்திய, மாநில அரசுகள் தங்களின் வரியை உயர்த்தியதாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
குமராட்சியில் விலை உயர்வு
இதில் சென்னையை விட கடலூர் மாவட்டம் குமராட்சியில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. அதாவது சென்னை மண்டலத்தின் கடைசி இடமான குமராட்சியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.64-க்கு விற்பனை செய்யப்பட்டது.
டீசல் ஒரு லிட்டர் ரூ.104.61-க்கு விற்பனையானது. கடலூரில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.09-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.104.26-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.67-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.103.83-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
போக்குவரத்து வசதிக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலையை நிர்ணயித்துள்ளது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல்வேறு பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story