புதுக்கோட்டையில் தூறல் மழை செங்கல் சூளைகளில் உற்பத்தி பாதிப்பு


புதுக்கோட்டையில் தூறல் மழை செங்கல் சூளைகளில் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2021 10:43 PM IST (Updated: 31 Oct 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் துறல் மழை விட்டு விட்டு பெய்தது. செங்கல் சூளைகளில் உற்பத்தி பாதிப்படைந்தது.

புதுக்கோட்டை:
தூறல் மழை
தமிழகத்தில் வடகிழக்குபருவ மழை கடந்த 25-ந் தேதி முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் வட கிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியின் காரணமாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை ஓரளவுக்கு மிதமாக பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. 
பகலில் விட்டு விட்டு தூறல் மழை பெய்துக்கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க பொதுமக்கள் குடையுடன் கடைவீதிக்கு வந்தனர். தூறல் மழையிலும் கீழ ராஜ வீதியில் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இந்த மழையால் குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டது.
தரைக்கடை வியாபாரிகள் பாதிப்பு
இடைவிடாமல் தூறிக்கொண்டிருந்த மழையினால் சாலையோரம் தரைக்கடை வியாபாரம் செய்தவர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். தார்ப்பாய் போட்டு மூடியபடியும், மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாயால் சிறிய மேற்கூரை போல அமைத்தும் வியாபாரம் செய்தனர். 
தீபாவளி பண்டிகை நேரம் மழையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிப்படைவதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பருவ மழை பரவலாக பெய்து வருகிற நிலையில் செங்கல்சூளைகளில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
மழை அளவு விவரம்
மழையினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கவிநாடு கண்மாயில் தண்ணீர் பரந்து விரிந்து கடல் போல காட்சியளிக்கிறது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே தூறல் மழை பெய்தது. 
இந்த நிலையில் நேற்று மாலையில் மழை இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பண்டிகைக்கான பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்தனர். கீழ ராஜ வீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- 
ஆதனக்கோட்டை-10, பெருங்களூர்-12, புதுக்கோட்டை-4.50, ஆலங்குடி-14, கந்தர்வகோட்டை-6, கறம்பக்குடி-12.60, மழையூர்-25.60, கீழணை-47.40, திருமயம்-7, அரிமளம்-27, அறந்தாங்கி-32.20, ஆயிங்குடி-15.80, நாகுடி-6.40, மீமிசல்-20.40, ஆவுடையார்கோவில்-7.30, மணமேல்குடி-46.30, இலுப்பூர்-3, குடுமியான்மலை-7, அன்னவாசல்-12.50, விராலிமலை-8, உடையாளிப்பட்டி-2, கீரனூர்-4, பொன்னமராவதி-14.40, காரையூர்-12.20.

Next Story