தர்மபுரி நகரில் தீபாவளி பண்டிகை ஜவுளிகள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்-இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறிய பிரதான சாலை


தர்மபுரி நகரில் தீபாவளி பண்டிகை ஜவுளிகள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்-இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறிய பிரதான சாலை
x
தினத்தந்தி 31 Oct 2021 10:52 PM IST (Updated: 31 Oct 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகரில் தீபாவளி பண்டிகை ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனை முன்னிட்டு பிரதான சாலை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது.

தர்மபுரி:
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி நகரில் ஜவுளிகள் மற்றும் நகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தர்மபுரி நகரில் உள்ள சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, பென்னாகரம் மெயின் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, சித்த வீரப்ப செட்டி தெரு, துரைசாமி கவுண்டர் தெரு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 
ஒவ்வொரு கடையிலும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து பொருட்களை தேர்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் நகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. முக்கிய சாலைகளில் இதற்காக தற்காலிக பட்டாசு கடைகள் முளைத்துள்ளது. இதில் பட்டாசுகள் வாங்க பொது மக்கள் குடும்பம், குடும்பமாக வருகிறார்கள்.
பட்டாசு-இனிப்பு கடைகள்
 மேலும் இனிப்பு மற்றும் காரம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பேக்கரிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், மளிகைக்கடைகள், பேன்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் விற்பனை படுஜோராக நடைபெற்றது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நகரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் இந்நிலையில் பிரதான சாலைகள் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. 
சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, சித்த வீரப்ப செட்டி தெரு உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்களின் வசதிக்காக இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story