தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 31 Oct 2021 10:52 PM IST (Updated: 31 Oct 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படுமா?
தர்மபுரி அதியமான்கோட்டை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் சாலையில் ஏற்கனவே இருந்த வேகத்தடை அண்மையில் அகற்றப்பட்டது. இந்த நிலையில் அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையை அடையாளம் காண அதன் மீது வெள்ளை வர்ணம் பூசுவது வழக்கம். இந்த பகுதியில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படாததால் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அதை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பது தெரியாமல் இயல்பான வேகத்தில் வரும் வாகனங்கள் வேகத்தடையை அதே வேகத்தில் கடக்கும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், ஒட்டப்பட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
சேலம் மாநகராட்சி அன்னதானபட்டி பாண்டு நகர் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தினமும் குப்பை வண்டி வராததால் அந்த பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கின்றன.  இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியை கடந்து செல்லும் போது மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க வேண்டும்.
-டி.முருகேசன், அன்னதானப்பட்டி, சேலம்.
வீணாகும் தண்ணீர்
சேலம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளி செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடை கால்வாயில் கலந்து வருகிறது. இது பற்றி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்த்து விடலாம்.
-ஊர்மக்கள், சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் கன்னங்குறிச்சி ஜட்ஜ் ரோட்டில் உள்ள இந்திராநகர் குடியிருப்பு பெருமாள் கோவில் அருகே கடந்த  4 மாதங்களாக  சாக்கடை  கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. நோய்த்தொற்று அபாயம்  உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து  நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயின் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்.
-புவனேஸ்வரி, இந்திராநகர்,  சேலம்.
தள்ளினால் மட்டுமே இயங்கும் டவுன் பஸ்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜெல்மாரம்பட்டி, அட்டபள்ளம், பவளந்தூர் ஆகிய கிராமங்களுக்கு தர்மபுரியில் இருந்து நாள்தோறும் 6 முறை டவுன் பஸ் வந்து செல்கிறது. இந்த வழித்தடத்தில் 26C டவுன் பஸ் மட்டுமே 6 முறை சென்று வருகிறது. மலைகள் சூழ்ந்த மேட்டுப்பாங்கான இப்பாதையில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் ஆகியோர் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்டரி பற்றாக்குறை காரணமாக பஸ் இயங்கவில்லை. மீண்டும் இயக்குவதற்கு பயணிகள் பஸ்சை தள்ள வேண்டி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மலை பாதையில் இயங்கும் பஸ்சை முறையாக பராமரித்து பயணிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-ஊர்பொதுமக்கள், வட்டுவனஅள்ளி, தர்மபுரி.
போலீசார் கவனத்துக்கு... 
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சேலம் மாநகருக்கு செல்லும் பிரதான சாலையில், சிவதாபுரம்  பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை உள்ளது. அதை சுற்றிலும் கடைகளும், பின்புறம் அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. ஊருக்கு நடுவே, மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் அமைந்துள்ள இந்த நிழற்குடையின் உள்ளே சிலர் மது அருந்துகிறார்கள். இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும்  அந்த நிழற்குடையில் சென்று நிற்கவே பயப்படுகின்றனர். மேலும் மது பிரியர்கள் பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்கின்றனர். எனவே போலீசார் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சென்றால் பெரும் உதவியாக இருக்கும்.
-அசோகன், சிவதாபுரம்.
மின் விளக்கு அமைத்து தரப்படுமா?
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் கட்டி நாயக்கன்பட்டி எம்.ஜி.ஆர். நகர் செல்லும் வழியில் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றோம். பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் அந்த வழியில் மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே அந்த சாலையில் மின்கம்பங்களில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது ஊர் பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், ஆவடத்தூர், சேலம்.
சேறும், சகதியுமான சாலை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோ.மு.நகர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை நடுவே குழிகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சரி செய்ய வேண்டும்.
-மோ.கலைவாணன், கோ.மு.நகர், சேலம்.
குப்பை கூளமாக மாறும் நதி
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி பகுதியில் வசிஷ்ட நதியில் கழிவுநீர் கலப்பதுடன், குப்பை, இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டுகின்றனர். இதனால் விசிஷ்ட நதி குப்பை கூளமாக மாறி வருகிறது. மழைக்காலங்களில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுகள் அனைத்தும் நதியில் கலந்து விடுவதால் நதிநீர் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகமாக அடிக்கிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.துரைராஜ், ஆத்தூர்.

Next Story