1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு


1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 31 Oct 2021 11:05 PM IST (Updated: 31 Oct 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

19 மாதங்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால் மலர் கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பெரம்பலூர், 
இன்று பள்ளிகள் திறப்பு
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர், கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்ததால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நடந்து வருகிறது.
இந்தநிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி 19 மாதங்களுக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
தயார் நிலையில் பள்ளிகள்
அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள், தனியார் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள், மேலும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இதையடுத்து, அந்தந்த பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மை படுத்தும் பணிகளும், பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகளும், வகுப்பறையில் இருக்கைகள் ஏற்பாடு வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
முகக்கவசம்
வகுப்பறைகளுக்கு செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க, தெர்மல் ஸ்கேனர் கருவிகளும் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கு பள்ளிகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் சானிடைசர் மூலம் கைகளைசுத்தம் செய்த பிறகு தான், வகுப்பறைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
பள்ளிக்கு கட்டாயமாக மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவ-மாணவிகள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் வகுப்புகள்
சமூக இடைவெளியை பின்பற்றி சுழற்சி முறையில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெறவுள்ளது. மாணவ-மாணவிகள் கை கழுவும் இடங்களில் சோப்பு, கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வருகை தரும் மாணவ-மாணவிகளை இனிப்பு, மலர் கொத்து கொடுத்து வரவேற்க ஆசிரியாகள் தயார் நிலையில் உள்ளனர். 
இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளை காட்டிலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பல மாதங்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகை தரவுள்ளதால், அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படாமல், சில நாட்களுக்கு புத்தாக்க பயிற்சி மட்டுமே அளிக்கப்படும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Next Story