விபத்து, காற்று மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்
விபத்து, ஒலி, காற்று மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு, கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை
விபத்து, ஒலி, காற்று மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு, கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி திருநாள்
தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகிறது.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் நிபந்தனைகளை விதித்தனர்.
நேரம் நிர்ணயம்
மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று கடந்த ஆண்டைபோலவே காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பசுமை பட்டாசுகள்
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல், பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். தீபாவளி அன்று பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக மாசு ஏற்படுத்தாத...
குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆகவே பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story