ஜெயங்கொண்டம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை


ஜெயங்கொண்டம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 31 Oct 2021 11:08 PM IST (Updated: 31 Oct 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி ஜெயங்கொண்டம் நகருக்குள் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜெயங்கொண்டம்,
ஆலோசனை கூட்டம்
ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன், தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சுபாஷினி, தா.பழுவூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஷாகிராபானு, ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து போலீசார் கூறியதாவது:-
கனரக வாகனங்கள் செல்ல தடை
தீபாவளி பண்டிகையையொட்டி ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், மளிகை, ஜவுளி உள்ளிட்ட பலவகையான கடைகளுக்கு வரக்கூடிய பொருட்கள் இரவு நேரங்களில் மட்டுமே கடைக்காரர்கள் தங்களது கடைக்கு முன் வாகனங்களை நிறுத்த வேண்டும். 
கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நகருக்கு வெளிப்புறம் நிறுத்த வேண்டும். 
மீன் மார்க்கெட்
பழைய மீன் மார்கெட் பின்புறம் கோடா புள்ளை குட்டையில் தற்போது இயங்கி வரும் மீன் மார்க்கெட் இடத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கடைவீதிக்கு பொருட்களை வாங்க வர வேண்டும்,
மீன்சுருட்டி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சிதம்பரம் சாலை, பெரியார் பள்ளிகள் அருகே நிறுத்த வேண்டும். தா.பழுர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வேலாயுத நகர், பாத்திமா பள்ளி, ஆரோக்கிய மஹால் அருகே நிறுத்த வேண்டும். செந்துறை மற்றும் வாரியங்காவல், குவாகம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறுத்திவிட்டு நகருக்குள் வரவேண்டும்.
அபராதம் விதிப்பு
ஆண்டிமடம் கல்லாத்தூர் பகுதி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் ஜெயங்கொண்டம் நகராட்சி அருகே உள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி வாகனங்களை கொண்டு வருவோர் மீது போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்களால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story