தினத்தந்தி புகார் பெட்டி
பொதுமக்கள் கொடுத்த புகார்கள் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டு உள்ளது.
பஸ் வசதி வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தினமும் வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவ-மாணவிகள், பக்தர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காட்டுமன்னார்குடிக்கு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சீர்காழியில் இருந்து வைத்திஸ்வரன், பட்டவார்த்தி, மணல்மேடு வழியாக காட்டு மன்னார்குடிக்கு செல்ல பஸ் வசதில் இல்லை. இதன் காரணமாக பயணிகள் காட்டு மன்னார்குடி செல்ல பொதுமக்கள் சிதம்பரம் சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்காழியில் இருந்து காட்டுமன்னார்குடிக்கு நேரடி பஸ் வசதி செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-கோபிநாதன், சீர்காழி.
கல்லூரியில் கொரோனா படுக்கைகள் அகற்றப்படுமா?
திருவாரூர் மாவட்டம் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் தற்காலிகமாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதற்கு வசதியாக வகுப்பறைகளில் சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சிகிச்சைக்கு வந்தவர்கள் நலமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து கல்லூரி கட்டிடம் மீண்டும் மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பறைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்காக போடப்பட்டிருந்த படுக்கைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாகும்.
-மாணவர்கள், திருவாரூர்.
பல்லாங்குழி சாலையில் பரிதாப பயணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பாரதி மூலங்குடி உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக தார் சாலை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். மேலும், குண்டும், குழியுமான சாலையால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு பாரதி மூலங்குடி பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தபகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-கோபி, மன்னார்குடி.
குண்டும், குழியுமான சாலை
காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் இருந்து காரைக்கால் செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-அஜய், காரைக்கால்.
ஆபத்தான மின்கம்பம்
நாகை மாவட்டம் நாகூர் மெயின் சாலையில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் பராமரிப்பின்றி வளைந்தும், முறிந்து விழும் நிலையிலும் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மின்கம்பத்தின் அருகே உள்ள வீட்டில் உள்ளவர்கள் மின்கம்பத்தால் விபத்து ஏற்பட்டு விடுமோ? என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-தாரிக்ராஜா, நாகூர்.
அரசு மருத்துவமனைக்குள் தேங்கும் மழைநீர்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள மேற்கூரையின் கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் மருத்துவமனைக்குள் கொட்டுகிறது. இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கி கிடப்பது தெரியாமல் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வழுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்குள் மழைநீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், திருவாரூர்.
Related Tags :
Next Story