வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நொய்யல்
ஏல விற்பனை
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர் கவுண்டன்புதூர், நல்லிக்கோவில், கொங்குநகர், மூலிமங்கலம், பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், நஞ்சை புகளூர், கடம்பங்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
இந்த கரும்புகளை சாறு பிழிந்து பாகுஆக்கி அதிலிருந்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுச்சர்க்கரை என தயார் செய்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் ஏல விற்பனை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வெல்ல மண்டிகள்
ஏல மார்க்கெட்டில் 13 வெல்ல மண்டிகள் உள்ளன. வெல்ல சிப்பங்களை ஏலம் எடுப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.
ஏலம் எடுத்த வெல்ல சிப்பங்களை லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், உத்தராஞ்சல், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
லாரிகள் மூலம்...
இந்தநிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் இனிப்பு பலகாரங்களை செய்து தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம். பலகாரம் செய்வதற்கு மூலப்பொருளாக வெல்லம் இருப்பதால் தீபாவளி பண்டிகை காலங்களில் இதன் விலை உயரும்.
இதேபோல் கரும்பு விலையும் அதிகரிக்கும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொழிலாளர்கள் இரவு, பகலாக தொடர்ந்து வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள் அதிகளவில் வெல்லங்களை வாங்கி தொடர்ந்து லாரிகள் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story