கொட்டும் மழையிலும் புத்தாடை வாங்க குடைகள் பிடித்தபடி குவிந்த மக்கள்


கொட்டும் மழையிலும் புத்தாடை வாங்க குடைகள் பிடித்தபடி குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 1 Nov 2021 1:04 AM IST (Updated: 1 Nov 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களே உள்ள நிலையில் கொட்டும் மழையிலும் புத்தாடை வாங்க குடைகள் பிடித்தபடி மக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களே உள்ள நிலையில் கொட்டும் மழையிலும் புத்தாடை வாங்க குடைகள் பிடித்தபடி மக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
தீபாவளி பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவார்கள். மேலும் பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் சாப்பிட்டும் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
பண்டிகையை சிறப்பாக கொண்டாட தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து புத்தாடை, பட்டாசுகள், பலகாரங்கள் வாங்குவதற்காக தஞ்சையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தஞ்சை மாநகரில் நேற்றுகாலை முதலே மழை இடைவிடாமல் பெய்து வந்தது. இருந்தாலும் மக்கள் குடைகளை பிடித்தபடி புத்தாடை வாங்குவதற்காக சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் தஞ்சை கீழராஜவீதி, தெற்குவீதி, காந்திஜிசாலை, கீழவாசல் செல்லும் சாலையில் உள்ள துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் கடைவீதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள். தஞ்சை காந்திஜிசாலை, அண்ணாசாலை, தெற்குவீதியில் நத்தையை போல் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி காந்திஜிசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து வகை துணிகளும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் நேற்றுகாலை முதல் இடைவிடாமல் மழை பெய்ததால் துணிமணிகள் நனைந்துவிடாமல் இருப்பதற்காக தார்ப்பாய்களை கொண்டு மூடி வைத்திருந்தனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு தரைக்கடை வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
பாதிப்பு
மழை நின்ற பிறகு வியாபாரத்தை தொடங்கலாம் என நினைத்த வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் தார்ப்பாய்களை கொஞ்சம் உயர்த்தி கட்டிவிட்டு துணிமணிகளை நனையவிடாமல் பாதுகாத்தபடி வியாபாரத்தை தொடங்கினர். மேலும் தள்ளுவண்டி, சைக்கிள்கள் மூலம் துண்டு, போர்வை, புதிய சட்டைகள் விற்பனை செய்வதற்காக சென்ற வியாபாரிகளும் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக குடைகள், மழைகோட்டு விற்பனை படுஜோராக நடைபெற்றது. கடைவீதிகளில் கூடும் மக்களிடம் கொரோனா குறித்தும், திருடர்கள் குறித்தும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமரா மூலமாக மக்கள் கூட்டத்தை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில் இனி வரும் நாட்களில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
கண்காணிப்பு பணி
கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பி திருடர்கள் கைவரிசையை காட்ட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க தஞ்சை மாநகர போலீசார் முன்னெச்சரிக்கையாக கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை அதிகரிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக தீபாவளி விற்பனை களைகட்டியிருந்தது. நகரை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பகோணம் வந்து தீபாவளி பொருட்களை வாங்கி சென்றனர். 
கடந்த சில நாட்களாக கும்பகோணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கும்பகோணத்தில் ஏராளமான தரைக்கடைகள் அமைத்து வியாபாரிகள் தீபாவளி  வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் தொடர் மழையால் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் தங்களது கடைகளை மூடி வைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே பொருட்களை வாங்கி சென்றனர்.  
இதுபற்றி தரைக்கடை வியாபாரிகள் கூறும்போது,
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் கும்பகோணத்தில் தான் அதிக அளவு தீபாவளி விற்பனை நடைபெறும். தீபாவளி பண்டிகை நடைபெறும் கடைசி நான்கு நாட்கள் மிக முக்கியமானவை. அதிலும் ஞாயிற்றுக்கிழமை ஆக அமைந்தால் கும்பகோணத்திற்கு கூடுதல் கூட்டம் வரும். இதனால் தீபாவளி பொருட்கள் அதிகம் விற்பனையாகும். ஆனால் கடந்த மூன்று நாட்களாக மழையின் காரணமாக பொதுமக்கள் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் நாங்கள் கவலையில் உள்ளோம் என்றனர்.

Next Story