தி.மு.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து


தி.மு.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 1 Nov 2021 1:37 AM IST (Updated: 1 Nov 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தி.மு.க. நிர்வாகியை கத்தியால் குத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி
திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர் 4-வது வார்டு தி.மு.க. வட்டச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவருடைய வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல் கண்ணனுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கண்ணனை குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.
வலைவீச்சு
அருகில் உள்ளவர்கள் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணனை கத்தியால் குத்தியவர்கள் யார்?, எதற்காக குத்தினார்கள்? என்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் ஸ்ரீரங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வைரலாகும் ஆடியோ
இதற்கிடையே தி.மு.க. வட்டச்செயலாளர் கண்ணன், பேசுவதாக ஒரு ஆடியோ சமூக வலைதளத்தில் உலா வந்தது. அதில், திருச்சியில் நடந்த மாநாட்டுக்கு 750 பேரை அழைத்துச்சென்ற செலவு ரூ.1 லட்சத்தை பகுதிச் செயலாளர் ஒருவர் தனக்கு தரவேண்டும் என்றும், அதை கடந்த 8 மாதமாக கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், தற்போது கேட்டதற்கு வீட்டுக்குள் புகுந்து, மனைவி, குழந்தைகள் கண்முன்னே தன்னை கத்தியால் குத்தியதாகவும், தற்போது ஆஸ்பத்திரியில் இருந்து பேசுவதாகவும் இந்த ஆடியோ இடம்பெற்று இருந்தது.

Next Story