ரூ.6 லட்சம் சரவெடிகள் பறிமுதல்


ரூ.6 லட்சம் சரவெடிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Nov 2021 2:05 AM IST (Updated: 1 Nov 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 14 சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்ததில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.

சிவகாசி, 
விருதுநகர் மாவட்டத்தில் 14 சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்ததில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள சரவெடிகளை பறிமுதல் செய்தனர். 
கோர்ட்டு உத்தரவு
 சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடிப்பதும், விற்பதும் குற்றம் எனவும், விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்றுமுன்தினம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை தயார் செய்யவும், விற்பனை செய்யவும் தடைவிதித்தது.
திடீர் சோதனை
இந்தநிலையில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ் குமார் மற்றும் வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
இதில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்த சரவெடிகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் 5 ஆயிரம் வாலா, 10 ஆயிரம் வாலா, 100 வாலா, 200 வாலா சரவெடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல் அந்த பகுதியில் உள்ள மேலும் 3 பட்டாசு கடைகளில் சரவெடிகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடைக்கு ‘சீல்’
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் பாரைப்பட்டியில் இயங்கி வந்த ஒரு பட்டாசு கடையின் அருகில் தகரசெட் அமைத்து அதில் பட்டாசு பண்டல்களை வைத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. 
வருவாய்த்துறை அதிகாரிகளின் சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் உத்தரவின் பேரில் விஸ்வநத்தம் கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தார். இந்த சோதனை அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டை வட்டத்தில் 12 கடைகளில் தாசில்தாருடன் இணைந்து ஆர்.டி.ஓ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது  65 சரவெடி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் செவல்பட்டி, துலுக்கன்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செவல்பட்டி பகுதியில் 6 கடைகளில் சரவெடிகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பட்டாசு கடைகளில் ஆய்வு செய்யும் பணி நடைபெறுவது தெரிந்த ஒரு சில பட்டாசு கடையினர் கடைகளை மூடி விட்டு சென்று விட்டனர். 
பறிமுதல் 
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 14 சிறப்பு குழுக்கள் ஆய்வு நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 1,424 சரவெடி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார். 

Next Story