தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவிலில்- திருவனந்தபுரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை தக்கலை மணலி சந்திப்பு வழியாக செல்கிறது. மணலி சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினிபிரட், கருங்கல்.
குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது
வில்லுக்குறியில் இருந்து பேயன்குழி செல்லும் ஆற்றங்கரை சாலையில் மணக்கரை புதுக்கிராமம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்ந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து பள்ளத்தை சரி செய்தனர். சம்பந்தப்பட்ட துறைக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
எரியாத மின் விளக்கு
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் ரயில்வே ரோடு திருப்பம் வரை மெயின் ரோட்டில் உள்ள சுமார் 7 மின்கம்பங்களில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றி புதிய விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நந்தினி, வேதநகர்.
நாய்கள் தொல்லை
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமரி அனந்தன் தெருவில் சுமார் 30 குடியிருப்புகள் உள்ளன. தற்போது, தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளை அவை விரட்டுகின்றன. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், அகஸ்தீஸ்வரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
மேலராமன்புதூரில் திருக்குடும்ப ஆலய தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைத்து மழைநீர் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள்ராஜ், மேலராமன்புதூர்.
சுகாதார சீர்கேடு
வெட்டூர்ணிமடம், கேசவதிருப்பபுரம், மூன்ஜங்சன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புகளுக்கு மத்தியில் மழைநீரும், சாக்கடையும் கலந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் நாய், எலி போன்றவை விழுந்து இறந்து அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, குடியிருப்பு பகுதியில் தேங்கும் சாக்கடையை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-அருண்குமார், கேசவதிருப்பபுரம்.
Related Tags :
Next Story