புனித் ரசிகர்கள் தற்கொலை முடிவை எடுக்க கூடாது - நடிகர் சிவராஜ்குமார் வேண்டுகோள்


புனித் ரசிகர்கள் தற்கொலை முடிவை எடுக்க கூடாது - நடிகர் சிவராஜ்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Nov 2021 2:20 AM IST (Updated: 1 Nov 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

புனித் ரசிகர்கள் தற்கொலை முடிவை எடுக்க கூடாது என்று நடிகர் சிவராஜ்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பெங்களூரு:

 நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு அவரது சகோதரரான நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரசிகர்கள் தீவிர வேதனை

  நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்து முடிந்தது. அவரது மறைவு எங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி தங்களின் குழந்தைகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவு ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

  அவர் என்னை விட 13 ஆண்டுகள் சிறியவர். அவர் இறப்பு எனது குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தீவிர வேதனை அடைகிறார்கள். எங்களுக்கு அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வேதனை நிரந்தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையை முன்னெடுத்து வாழ வேண்டும். நடந்த விஷயங்களை மறந்து பயணிக்க வேண்டியுள்ளது.

சம்பவங்கள் நடக்கவில்லை

  கர்நாடக அரசு குறிப்பாக போலீசார் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனது தந்தை இறந்தபோது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. ஆனால் இப்போது எந்த இடத்திலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட நடக்கவில்லை. இதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் குடும்பத்தின் மீது அவர் மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  5-ம் நாள் நிகழ்வாக பால்-நெய் ஊற்றும் சடங்கு நடக்கிறது. அதன் பிறகு அதாவது வருகிற 3-ந் தேதி முதல் ரசிகர்கள் சமாதியை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இதுகுறித்து முதல்-மந்திரியுடன் பேசுகிறேன். புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். யாரும் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. புனித் ராஜ்குமாரே இதை விரும்ப மாட்டார். அன்பு இருக்க வேண்டும். அதற்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது. தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். குடும்பத்தை கவனித்து கொள்வது முக்கியம்.
  இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.

Next Story