சிறுத்தை தாக்கி பெண் சாவு
ராமநகர் அருகே மகன் கண்எதிரே சிறுத்தை தாக்கி பெண் பலியானார். இதனால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
சிறுத்தை தாக்கி சாவு
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கல்லு பாளையா கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 40). இவருக்கு ஒரு மகன் உள்ளான். மகாலட்சுமி தனது மகனுடன் கிராமத்தின் அருகே வனப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள புதரில் இருந்து வந்த ஒரு சிறுத்தை மகாலட்சுமியின் மகன் மீது பாய்ந்தது. உடனே அவர், சிறுத்தையிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
அப்போது அங்கு நின்ற மகாலட்சுமி மீதும் சிறுத்தை பாய்ந்து தாக்கியது. அவரை, சிறுத்தை கடித்து குதறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமியின் மகன் ஓடிப்போய் கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம் அடைந்திருந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
சாலை மறியல் போராட்டம்
கிராமத்திற்குள் அடிக்கடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், அதனை தடுக்க வனத்துறையினர் தவறி விட்டதாகவும் கிராம மக்கள் கூறினார்கள். பின்னர் பெங்களூரு-மாகடி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வனத்துறை உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதானமாக பேசினார்கள். சிறுத்தையை பிடிக்கவும், கிராமத்திற்குள் வனவிலங்குகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
மேலும் மகாலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.7½ லட்சம் நிதி உதவி வழங்குவதாகவும், 2 ஆண்டுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவதாகவும், மகாலட்சுமியின் குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாகடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story