வீடு தேடி சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம்


வீடு தேடி சட்ட விழிப்புணர்வு  வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 1 Nov 2021 2:43 AM IST (Updated: 1 Nov 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் இருந்து வீடு தேடி வரும் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கியது. பிரசாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதித் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து வீடு தேடி வரும் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கியது. பிரசாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதித் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்ட ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தி பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய சட்ட சேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. 
நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான உதித் உமேஷ் லலித் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், வீடுதேடி வரும் நீதி சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து ெதாடங்கி வைத்து பல்வேறு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தகனமேடை பிரச்சினை
மக்கள் நீதி மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டு, அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. குமரி மாவட்டத்தில் தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பண்டாரபுரம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு தகனமேடை இல்லை என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், சட்டப்பணி ஆணையமும் இணைந்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி உள்ளனர்.
நீதி எல்லோருக்கும் பொதுவானது. வறுமை உள்பட பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் லோக் அதாலத் செயல்பட்டு வருகிறது. 
இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள நகரம் மற்றும் கிராம மக்களை வீடு தேடி சென்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இருந்து 5 வாகனங்கள் மூலம் வீடு தேடி வரும் நீதி என்பதை மைய பொருளாக கொண்டு சட்ட விழிப்புணர்வு வாகன பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  
இவ்வாறு அவர் பேசினார். 
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து வருவாய் துறை, கல்வித் துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, விவசாயத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவருமான துரைசாமி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், சென்னை ஐகோர்ட்டு சட்ட சேவைகள் தலைவருமான ராஜா, மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன், மாவட்ட நீதிபதி ராஜசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story