கன்டெய்னர் லாரி மோதி பெண் தூய்மை பணியாளர் பலி - மற்றொருவரின் கால் நசுங்கியது


கன்டெய்னர் லாரி மோதி பெண் தூய்மை பணியாளர் பலி - மற்றொருவரின் கால் நசுங்கியது
x
தினத்தந்தி 1 Nov 2021 5:14 AM IST (Updated: 1 Nov 2021 5:14 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி மோதியதில் பெண் தூய்மை பணியாளர் பலியானார். மற்றொருவரின் கால் நசுங்கியது.

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட டி.கே.எஸ்.நகர், மணலி விரைவு சாலையோரம் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்தனர்.

அப்போது எர்ணாவூரில் இருந்து சத்தியமூர்த்தி நகர் நோக்கி வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் தூய்மை பணியாளர்கள் மீது கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது.

இதில் எண்ணூரைச் சேர்ந்த நிர்மலா (வயது 36) என்ற தூய்மை பணியாளர் மீது கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய நிர்மலா, அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

திருவொற்றியூரை சேர்ந்த ரதி அம்மாள் (50) என்ற மற்றொரு தூய்மை பணியாளர் மீது லாரி சக்கரம் ஏறியதில் அவரது இடது கால் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்த சக தூய்மை பணியாளர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்தவுடன் கன்டெய்னர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தலைமறைவான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேபோல் திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55), எலக்ட்ரீசியன். நேற்று மாலை மணலி விரைவு சாலையில் எம்.எப்.எல். சந்திப்பில் இருந்து சத்தியமூர்த்தி நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த டிரெய்லர் லாரி இவரை முந்திச்செல்ல முயன்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த சீனிவாசன், டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரெய்லர் லாரி டிரைவர் முத்துகுமார் (27) என்பவரை கைது செய்தனர்.

Next Story