திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் - பொதுமக்கள் அவதி


திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 Nov 2021 5:43 AM IST (Updated: 1 Nov 2021 5:43 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு வார்டு, ரத்த வங்கி, ஸ்கேன் சென்டர், மகப்பேறு வார்டு, உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கொரோனா சிறப்பு வார்டு திறக்கப்பட்டு அதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் இந்த வார்டில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில் இந்த கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் கையுறை, கொரோனா கவச உடை மற்றும் மருத்துவ கழிவுகளை டாக்டர்கள் அகற்றி அதனை ஆஸ்பத்திரி வளாகத்தின் பிணவறையின் அருகில் பாதுகாப்பற்ற முறையில் கொட்டி வைத்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவ கழிவுகளும் இங்கு கொட்டப்படுகிறது. இந்த மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மருத்துவ கழிவுகள் குவியல் குவியலாக குவிக்கப்பட்டுள்ளது. அதனருகே உள்ள குழந்தைகள் சிறப்பு வார்டு மற்றும் மகப்பேறு வார்டு என ஆஸ்பத்திரியின் பல்வேறு பகுதியில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் கண்டும் காணாமலும் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இந்த மருத்து கழிவுகள் மீது மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடியவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

பொதுமக்களுக்கு சுகாதாரத்தை அளித்துவரும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி இதுபோன்ற மருத்துவ கழிவுகளை காலதாமதம் செய்யாமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story