நடைபாதையில் தூங்கிய 2 பேர் அடுத்தடுத்து கல்லால் தாக்கி படுகொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 1 Nov 2021 5:55 AM IST (Updated: 2 Nov 2021 8:13 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நடைபாதையில் தூக்கிய 2 பேரை அடுத்தடுத்து கல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 
மும்பையில் நடைபாதையில் தூக்கிய 2 பேரை அடுத்தடுத்து கல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் கைது செய்தனர். 
அடுத்தடுத்து கொலை
மும்பை பைகுல்லா பழமார்க்கெட் மற்றும் ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையோரத்தில் தூங்கிய 2 பேர் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதாக சம்பவத்தன்று  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் கருப்பு சட்டை, கால்களில் சாக்ஸ் மட்டும் அணிந்த மர்மநபர் ஒருவர் இந்த கொடூர கொலைகளை அரங்கேற்றியது தெரியவந்தது. இவர் இரவு 7.50 மணி அளவில் பைகுல்லா பழமார்க்கெட் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரின் தலையில் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து பலமாக தாக்கினார். இதில் அந்த நபர் துடிதுடிந்து உயிரிழந்தார். 
 இதைத்தொடர்ந்து அதே நபர் இரவு 8.05 மணி அளவில் ஜே.ஜே அரசு ஆஸ்பத்திரியின் கேட் நம்பர் 14-ம் பகுதியில் சாலையோரமாக தூங்கி கொண்டிருந்த மற்றொரு நபரின் தலையிலும் கல்லால் 4 முறை தாக்கி கொலை செய்தார். 
தீவிர தேடுதல் வேட்டை
இதைத்தொடர்நது கண்காணிப்பு கேமராவில் கிடைத்த அடையாளங்களை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
அப்போது  இரவு 9 மணி அளவில் ஜே.ஜே மேம்பாலத்தின் கீழே கைவண்டிக்கு அருகே அந்த நபர் நின்றுகொண்டு இருப்பதை கண்ட போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவம் நடந்து சுமார் 1 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் சங்கர் கவுடா எனவும், குப்பைகளை சேகரித்து வாழ்க்கையை நடத்தி வந்ததும் தெரியவந்தது.  
இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-
ஏற்கனவே பிடிபட்டவர்
 நாங்கள் பிடித்த போது சுரேஷ் சங்கர் கவுடா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். நாங்கள் பிடித்தை அவர் முகத்தில் எந்த வருத்தத்தையோ அல்லது வேறு உணர்ச்சிகளையோ காட்டவில்லை. எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதுகிறோம். 
கடந்த 2015-ம் ஆண்டு குர்லா பகுதியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ஒருவரை கொன்ற வழக்கில் சுரேஷ் சங்கர் கவுடா கைது செய்யப்பட்டார். ஆனால் கோர்ட்டில் ஆதாரம் சமர்பிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபாதைகள் அல்லது தெருக்களில் நடந்த கொலைகள் குறித்த அனைத்து தகவல்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story