திருவள்ளூர் மாவட்டத்தில் சீனப்பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்கும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை


திருவள்ளூர் மாவட்டத்தில் சீனப்பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்கும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Nov 2021 1:28 PM IST (Updated: 1 Nov 2021 1:28 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் சீனப்பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்கும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

81 பட்டாசு கடைகளுக்கு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஆணை வழிகாட்டுதலின்படி இ-சேவை இணையவழி மையம் மூலமாக கடந்த 1-9-2021 முதல் 22-10-2021 வரை 32 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர்கள் உரிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே பரிந்துரைக்கப்பட்ட 25 விண்ணப்பங்களின் பேரில் தற்காலிக கடைகளை அமைத்துக்கொள்ள 22-10-2021 முதல் 21-11-2021 வரை செயல்பட அனுமதி அளித்து உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாத இதர விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உட்கோட்டங்களான திருவள்ளூரில் 41, திருத்தணியில் 14 மற்றும் பொன்னேரியில் 26 என மொத்தம் 81 பட்டாசு கடைகளுக்கு நிரந்தர உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் நேரத்தில்

உரிமம் வழங்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய அரசு வழிகாட்டுதலின்படி நெறி முறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி:-

பட்டாசு விற்பனை தொடங்கிய பின் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈர சாக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்நேரமும் பயன்படுத்தத்தக்க வகையில் போதுமான எண்ணிக்கையில் தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். புகைபிடிக்கக் கூடாது என அறிவிப்பு பலகை வைத்து அதனை கண்டிப்பாக பின்பற்றி கடைகளின் அருகில் யாரையும் புகை பிடிக்க அனுமதிக்க கூடாது. மின்தடை ஏற்படும் நேரத்தில் மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்கு மற்றும் தீக்குச்சிகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. உதிரி பட்டாசுகள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

தரமான மின் வயர்கள், இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக வெப்பம் தரக்கூடிய மின்விளக்குகளை அருகில் வைக்கக்கூடாது. கடைகளை மூடும் போது பலமுறை கவனத்துடன் பார்வையிட்டு அனைத்து மின் விளக்குகளையும் துண்டித்த பின்னரே கடையை மூடவேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பெயிண்டு, எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளில் அருகிலோ சேமித்து வைக்கக்கூடாது.

தீயணைப்பான்கள்

உரிமம் பெறப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். 125 டெசிபலுக்கு மேல் வெடிக்கக்கூடிய அணுகுண்டு வெங்காய வெடி போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது. எந்நேரமும் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பேரலில் தண்ணீர் நிரப்பி பாதுகாப்புக்காக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் அல்லது உலர் மாவு கொண்ட 2 தீயணைப்பான்களை எந்நேரமும் பாதுகாப்புக்காக வைத்திருக்கவேண்டும். உரிமம் வழங்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் பட்டாசு சேமித்து வைக்கவோ விற்பனை செய்யவோ கூடாது.

கடும் நடவடிக்கை

சீன பட்டாசு வகைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் போலீசார் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 5997626 மற்றும் வாட்ஸ்அப் எண் 9840327626 போன்றவை மூலம் புகார்களை அளிக்கலாம். சீன பட்டாசு வகைகளை விற்றால் அல்லது பதுக்கி வைத்தல் மற்றும் உரிமம் இல்லாமல் பட்டாசு சேகரித்து வைத்து விற்பனை செய்தல் போன்ற செயல்களை மேற்கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தரைதளம் தவிர மாடிகள் மற்றும் நிலவறைகளில் பட்டாசுகளை சேமிக்க கூடாது. கைத்துப்பாக்கி பட்டாசு வகையினை கண்டிப்பாக வெடித்து காண்பிக்க கூடாது. தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் அல்லது 101, 102, 044-27660299 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story