வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 1 Nov 2021 5:04 PM IST (Updated: 1 Nov 2021 5:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 66 ஆயிரத்து 211 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 66 ஆயிரத்து 211 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல்
திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022-ன் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலை அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத் வெளியிட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் நகல்கள் மற்றும் குறுந்தகடு வழங்கப்பட்டது.
23,66,211 வாக்காளர்கள்
கடந்த மார்ச் மாதம் 19ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியல் விவரங்கள் திருத்தம் மேற்கொள்ள 6 ஆயிரத்து 591 விண்ணப்பங்கள், முகவரி மாற்றம் செய்ய 648 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 512 வாக்குச்சாவடிகள் உள்ளன. 11 லட்சத்து 68 ஆயிரத்து 682 ஆண்கள், 11 லட்சத்து 97 ஆயிரத்து 236 பெண்கள், 293 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 66 ஆயிரத்து 211 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 494 வாக்காளர்களும், அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் வடக்கு தொகுதியில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 217 வாக்காளர்களும் உள்ளனர். குறைந்தபட்சமாக மடத்துக்குளம் தொகுதியில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 705 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அங்கு சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்களுக்கு வருகிற 30-ந் தேதி வரை மனுக்கள் கொடுக்கலாம். வருகிற 13ந் தேதி, 14ந் தேதி, 27ந் தேதி, 28ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5ந் தேதி வெளியிடப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகிற ஜனவரி மாதம் 1ந் தேதி 18 வயது பூர்த்தியாகுபவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் வினீத் கூறினார்.
இதில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, கலெக்டரின் நேர்முக  உதவியாளர் சாகுல் ஹமீது, திருப்பூர் ஆர்.டிஓ. ஜெகநாதன், தேர்தல் தனி தாசில்தார் முருகதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 
-

Next Story