நீலகிரியில் 5 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள்
நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 807 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம்.
ஊட்டி
நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 807 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம்.
வரைவு பட்டியல்
ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அதன் நகல்களை வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் 2098 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். நீக்குதலுக்கான படிவங்கள் பெறப்பட்டு 7,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதிக தொலைவில் இருந்து வாக்காளர்கள் வர வேண்டி உள்ளதால் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் கவர்னர்சோலை, குன்னூர் தொகுதியில் ஜெ.கொலக்கம்பை, அரக்காடு ஆகிய 3 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.
பெண்கள் அதிகம்
வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 97 ஆயிரத்து 583 ஆண்கள், 1 லட்சத்து 6 ஆயிரத்து 503 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 6 பேர் என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 92 வாக்காளர்கள் உள்ளனர். கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 91 ஆயிரத்து 640 ஆண் வாக்காளர்கள், 96 ஆயிரத்து 240 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 880 பேர் உள்ளனர்.
குன்னூர் தொகுதியில் 90 ஆயிரத்து 383 ஆண்கள், 99 ஆயிரத்து 450 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 835 வாக்காளர்கள் இருக்கின்றனர். மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 606 ஆண்கள், 3 லட்சத்து 2 ஆயிரத்து 193 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 807 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் குறைவு
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 5,143 வாக்காளர்கள் குறைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், தேர்தல் பிரிவு தாசில்தார் புஷ்பா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story