கொட்டும் மழையில் குடை பிடித்தபடி வந்த மாணவ-மாணவிகள்
1½ ஆண்டுகளுக்கு பிறகு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கொட்டும் மழையில் குடைபிடித்தபடி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். இவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
திண்டுக்கல்:
தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்
கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இருந்த போதிலும் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கான வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
குடை பிடித்தப்படி...
அதன்படி திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. 1½ ஆண்டுகளுக்கு பிறகு வரும் மாணவ-மாணவிகளை வரவேற்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த சூழ்நிலையில் நேற்று அதிகாலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழையும், பலத்த மழையும் விட்டு, விட்டு பெய்தது. ஆனாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி பெற்றோருடன் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.
ஆரத்தி எடுத்து வரவேற்பு
மாணவ-மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், சந்தன மாலை அணிவித்தும், சந்தன பொட்டு வைத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சில பள்ளிகளில் பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் மற்றும் பலூன்களை வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக மும்மத வழிபாடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கதைகள், பாடல்கள்
பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர் நுழைவு வாயில் முன்பு நிறுத்தப்பட்டு மாணவ-மாணவிகள் மட்டும் பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது சிலர் தங்களின் குழந்தைகளை உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி வைத்தனர். பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். அவர்களின் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வகுப்பறையிலும் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். 1½ ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் வீட்டிலேயே இருந்ததால், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதைகள் கூறியும், பாடல்களை பாடியும் ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தினர்.
மனநிலை மாற்றம்
மாணவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் புத்தாக்க வகுப்புகளும் நடத்தப்பட்டன. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விளக்குகளையே சுற்றித்திரியும் மின்மினி பூச்சிகளை போல வீட்டிலேயே முடங்கி கிடந்த மாணவ-மாணவிகள், பள்ளி என்னும் தோட்டத்துக்குள் வண்ணத்துப்பூச்சிகளாய் உற்சாகத்தில் வலம் வந்த காட்சியை பல்வேறு பள்ளிகளில் காண முடிந்தது.
Related Tags :
Next Story