700 பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் 700 பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 700 பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது.
பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன.
கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பு
இந்தநிலையில், தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளை “விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக பள்ளிகளில் மின்அலங்காரம் மற்றும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.
நாகை மாவட்டத்தில் நேற்று பள்ளி திறக்கப்பட்டன. காலை முதலே மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு நுழைவாயிலில் நின்று ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கி, வெப்பநிலை பரிசோதனை செய்தனர்.
இனிப்பு வழங்கி வரவேற்பு
இதையடுத்து பூ மற்றும் இனிப்புகளை வழங்கி மாணவ-மாணவிகள் வகுப்பறைக்கு அழைத்து சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்த உற்சாகத்தில் மாணவ-மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வந்த கலெக்டர் அருண் தம்புராஜ், ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து, பூ கொடுத்து வரவேற்றார். பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கடைபிடிக்கப்படும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
அன்பான அறிவுரை
நாகை மாவட்டத்தில் 270 தொடக்கப் பள்ளிகள், 85 நடுநிலைப் பள்ளிகள், 126 உதவி பெறும் பள்ளிகள், 75 சுய உதவி பள்ளிகள், 144 உயர்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 700 பள்ளிகளில் 1 முதல் 8 வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டது.
கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை அன்பான அறிவுரைகளுடன் வரவேற்க வேண்டும். ஊக்கமளிக்கும் விதமாக பாட்டு, விளையாட்டு உள்ளிட்டவைகளுடன் பாடம் நடந்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
ஊர்வலமாக அழைத்து வந்தனர்
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு தொடக்கப்பள்ளியின் நுழைவு வாயிலில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பள்ளிக்கு அருகே உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அங்கிருந்து மாணவர்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். மாணவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் கோடியக்காடு, அண்டர் காடு, கருப்பம்புலம், தகட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை மேளதாளம் முழங்க ஆசிரியர்கள் வரவேற்றனர்.
Related Tags :
Next Story