மருமகனுக்கு ஆயுள் தண்டனை
ஊத்துக்குளி அருகே சத்துணவு அமைப்பாளரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்
ஊத்துக்குளி அருகே சத்துணவு அமைப்பாளரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சத்துணவு அமைப்பாளர் கொலை
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி தளவாய்பாளைம் மோளகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் வயது 60). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மகளை அதே பகுதியை சேர்ந்த பாலசந்திரன் 51 என்பவர் திருமணம் செய்து வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்தார்.
இந்தநிலையில் சுந்தரேசன் தனது உறவினருக்கு கடன் கொடுப்பதற்காக தனது மருமகன் பாலசந்திரனிடம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து திருப்பிக்கொடுத்து விட்டார். மீதம் உள்ள ரூ.30 ஆயிரத்தை கொடுக்குமாறு பாலசந்திரன் அடிக்கடி மாமனார் சுந்தரேசனிடம் தகராறு செய்து வந்தார்.
ஆயுள் தண்டனை
கடந்த 1-9-2018 அன்று சுந்தரேசன் தனது வீட்டுக்கு முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாலசந்திரன் தனது பணத்தை திருப்பிக் கேட்டதால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பாலசந்திரன் கத்தியால் சுந்தரேசனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாலசந்திரனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாமனாரை கொலை செய்த பாலசந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story