தொடர் மழையால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் இந்த மழை நீடித்தது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. தொடர்ந்து நேற்று காலை 7 மணி முதல் வானம் மேக மூட்டத்துடனும், மப்பும் மந்தாரமுமாகவே காட்சியளித்தது. இதனால் மாணவ- மாணவிகளின் நலனை கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் 1,804 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் மாணவ- மாணவிகளை வரவேற்க ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தயாராக இருந்தனர். ஆனால் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பெற்றோர்களும், மாணவர்களும் ஏமாற்றமடைந்தனர்.
ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
மேலும் நேற்று காலையில் இருந்து மதியம் வரை மழை ஓய்ந்திருந்த நிலையில் மாலை 3 மணிக்கு பிறகு விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் பகுதியில் உள்ள பம்பை ஆற்று வாய்க்கால், ஆழாங்கால் வாய்க்கால், பானாம்பட்டு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அதுபோல் பம்பை ஆறு, எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மழை தூறல் பெய்து கொண்டே இருந்தது. பின்னர் 10 மணிமுதல் 11 மணி வரை மழை நின்றது. தொடர்ந்து மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கள்ளக்குறிச்சியில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டது.
இதனால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். இடைவிடாது பெய்த மழையினால் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்க செல்ல முடியாமல் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர், நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனிடையே விவசாய சங்கத்தினர் ஆற்றில் வரும் தண்ணீரை அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஏரி, குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. முன்னதாக மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story