வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நாமக்கல் கலெக்டர் உள்பட 4 அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு பரமத்தி கோர்ட்டு உத்தரவு
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நாமக்கல் கலெக்டர் உள்பட 4 அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு பரமத்தி கோர்ட்டு உத்தரவு
பரமத்திவேலூர்:
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்பட 4 அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பரமத்தி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நில பட்டா
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கரையை அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவருடைய மகன் ராசப்பன். விவசாயியான இவரது நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக அவர் பரமத்தி சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராசப்பன் நில பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டாவாக வழங்க அப்போதைய பரமத்தி சார்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து தகவல் நாமக்கல் மாவட்ட கலெக்டர், பரமத்திவேலூர் தாசில்தார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுதாக்கல்
இதனிடையே நீண்ட காலமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்ததால், இதுதொடர்பாக ராசப்பன் மீண்டும் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றும் படி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு மாவட்ட கலெக்டர், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
பிடிவாரண்டு
இந்த நிைலயில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று பரமத்தி சார்பு கோர்ட்டு நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story