கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு-மாணவர்களுக்கு பூ, இனிப்பு கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு-மாணவர்களுக்கு பூ, இனிப்பு கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 1 Nov 2021 11:15 PM IST (Updated: 1 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு பூ, இனிப்பு கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி:
பள்ளிகள் திறப்பு
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து 19 மாதங்களுக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையொட்டி காவேரிப்பட்டணம் அருகே வேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு பூ கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1,713 அரசு உயர்நிலை பள்ளிகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 55 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 
கதை, பாடல்கள்
தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பள்ளி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக முதல் 2 வாரங்களுக்கு கதை, பாடல்கள், விளையாட்டு, வர்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்றவை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் வி.சி.தம்பிதுரை, தலைமை ஆசிரியர்கள் பாலசுந்தரம், அருள்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பூ, இனிப்பு
ஓசூர் பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து காலை முதலே மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்தனர். அங்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். 
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளை ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ரோஜா மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சத்யா, மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உற்சாக வரவேற்பு
காரப்பட்டு அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் மாதேஸ்வரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசந்தி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானபண்டிதன், உதவி தலைமை ஆசிரியர் வசந்தி, ஆசிரியர் பயிற்றுனர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய குழுத்தலைவர் உஷாராணி குமரேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி, துணைத்தலைவர் பச்சையம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாட்டு பாடி...
வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவிகளை தலைமை ஆசிரியை ஞானசேகரி தலைமையில், ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், பாட்டு பாடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை முதலே பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு முககவசம், சமூக இடைவெளி மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் விளக்கி கூறினர். பின்பு பள்ளி மாணவிகள் வகுப்பறையில் சமூக இடைவெளிவிட்டு உட்கார வைக்கப்பட்டனர்.
வாழை தோரணம்
பாலேத்தோட்டம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் வாழை மர தோரணம் கட்டி நுழைவு வாயிலில் பூங்கொத்து கொடுத்தும், மலர் தூவியும், இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை தலைமை அசிரியை பரபாவதி வரவேற்றர். இதில் நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி, மூன்றம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், துணைத்தலைவர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story