ராயக்கோட்டையில் போலி லாட்டரி சீட்டுகள் தயாரித்த 3 பேர் கைது
ராயக்கோட்டையில் போலி லாட்டரி சீட்டுகள் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
லாட்டரி சீட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீசார் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையில் ராயக்கோட்டை பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ராயக்கோட்டை கீழ் தெருவை சேர்ந்த சிராஜ் (வயது 37) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார் 69 லாட்டரி சீட்டுகள் மற்றும் 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் ராயக்கோட்டையில் சூளகிரி சாலையில் உள்ள பேன்சி கடையில் சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பது தெரிந்தது.
3 பேர் கைது
இதனால் கடை உரிமையாளரான ராயக்கோட்டை கடைவீதியை சேர்ந்த திவாகர் (32), ரகமத் காலனியை சேர்ந்த லோகநாதன் என்ற மூக்குத்தி (63), கோனேரி அக்ரஹாரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் போலியாக லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒரு கணினி, மடிக்கணினி, பிரிண்டிங் மெஷின் மற்றும் 82 லாட்டரி சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story