கிருஷ்ணகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 6 தொகுதிகளில் 16 லட்சத்து 7 ஆயிரத்து 281 வாக்காளர்கள்


கிருஷ்ணகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 6 தொகுதிகளில் 16 லட்சத்து 7 ஆயிரத்து 281 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 1 Nov 2021 11:15 PM IST (Updated: 1 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 16 லட்சத்து 7 ஆயிரத்து 281 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி:
வரைவு வாக்காளர் பட்டியல் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார்.
அதில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 8 லட்சத்து 8 ஆயிரத்து 781 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 98 ஆயிரத்து 220 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 280 பேர் என 16 லட்சத்து 7 ஆயிரத்து 281 வாக்காளர்கள் உள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
2,001 புதிய வாக்காளர்கள் 
தமிழக சட்டசபை தேர்தலின் போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கு பிறகு தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக 2,001 பேர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெறவுள்ள சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1.1.2022-ன் படி 18 வயது பூர்த்தியடையும் அனைத்து இளம் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியில் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ள தகுதியுடையவர்கள். மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலும், வளாக தூதர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இளம் வாக்காளர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள வருகிற 30-ந் தேதி வரை மனு அளிக்கலாம். வருகிற 13, 14 மற்றும் 27, 28-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, உதவி கலெக்டர்கள் சதீஷ்குமார், தேன்மொழி, தேர்தல் தாசில்தார் ஜெயசங்கர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story