தர்மபுரி மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு-பூங்கொத்து கொடுத்து வரவேற்பு


தர்மபுரி மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு-பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
x
தினத்தந்தி 1 Nov 2021 11:15 PM IST (Updated: 1 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தர்மபுரி:
பள்ளிகள் திறப்பு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய மற்றும் நடுநிலைப்பள்ளிகள், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்,  பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பப்ளிக் பள்ளிகள், சுயநிதி உயர்நிலைப்பள்ளிகள், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி என மொத்தம் 1,620 பள்ளிகள் உள்ளன. இந்த அனைத்து பள்ளிகளும் 19 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.
18 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை அந்தந்த பள்ளிகளின் சார்பில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரோஜாப்பூ, இனிப்பு மற்றும் முககவசம் வழங்கி உற்சாக வரவேற்றனர். மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. 
முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மாணவர்கள் சமூக இடைவெளியுடன் ஒரு மேஜைக்கு 2 பேர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். பள்ளிகள் தொடங்கிய நிலையில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தாமல் அறிவுரைகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த நிலையில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வகுப்பறைகளுக்கு சென்று மாணவ-மாணவிகள் அனைவரும் தனி மனித இடைவெளியுடன், முககவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். இதேபோன்று இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலும் முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆய்வுசெய்தார்.
காரிமங்கலம்
காரிமங்கலம் அடுத்த மொளப்பனஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, பூனாத்தனஅள்ளி புதூர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் பூங்கொத்து, இனிப்பு வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர், ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம், ஒன்றிய இளைஞரணி நிர்வாகி தங்கதுரை, நிர்வாகிகள் கோபி, அண்ணாமலை, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி
நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இண்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இண்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நத்தஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் சக்தி, அறிவு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பள்ளி தலைமையாசிரியை சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story