22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடினர்


22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடினர்
x
தினத்தந்தி 1 Nov 2021 11:38 PM IST (Updated: 1 Nov 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் 6 மாதத்துக்கு பிறகு 22 தீர்த்த கிணறுகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் கோவிலில் 6 மாதத்துக்கு பிறகு 22 தீர்த்த கிணறுகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.

தீர்த்த கிணறு மூடல்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 6 மாதத்திற்கு மேலாகவே கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டு கிடந்தன. இதனால் தினமும் கோவிலுக்கு வந்து சென்ற பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
மேலும் தீர்த்த கிணறுகளையே நம்பி வாழும் யாத்திரை பணியாளர்களும் வருமானம் இன்றி தவித்து வந்தனர். தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும் என்று பக்தர்களும், யாத்திரை பணியாளர்களும் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

பக்தர்கள் புனித நீராடினர்

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட நேற்று முதல் அரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் அனைத்தும் நேற்று காலை 5.30 மணி அளவில் திறக்கப்பட்டன. தொடர்ந்து காலை 6 மணி முதல் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். கோவிலின் வடக்கு கோபுர வாசல் வழியாக வந்த பக்தர்கள் தீர்த்த கவுண்ட்டரில் ரூ.25 டிக்கெட் பெற்று  புனித நீராட சென்றனர்.
6 மாதத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் நாளான நேற்று காலை முதலே தீர்த்த கிணறுகளில் புனித நீராட பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்றார்கள். இதனால் கோவிலின் தீர்த்தக்கிணறு பகுதி நீண்ட நாட்களுக்கு பிறகு களைகட்டி காணப்பட்டது.

Next Story