காலையில் வெயில், மாலையில் கொட்டிய மழை
நேற்று காலையில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் மழை கொட்டியது. இதனால் தீபாவளி பண்டிகைகால வியாபாரம் தொடர்ந்து மந்தமடைந்து வருகிறது.
கடலூர்,
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து வருகிறது.
ஆனால், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், தீபாவளி பண்டிகை கால வியாபாரமும் அவ்வப்போது பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
அந்த வகையில், குமரிகடல் மற்றும் இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அதன் படி கடலூர் மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
மக்கள் கூட்டம் அதிகரித்தது
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் மழை சற்று ஓய்ந்து இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை 2 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் மாலை 6 மணி வரை பெய்து கொண்டே இருந்தது. பின்னர் மழை ஓய்ந்து, வானம் மேக மூட்டங்கள் இன்றி வெண்மேகமாக காட்சி அளித்தது. மேலும் சூரியனின் ஆதிக்கமும் மேலோங்கி இருந்ததால், சுள்ளென வெயில் அடித்தது.
எனவே, மக்களும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ல பொருட்கள் வாங்குவதற்காக கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். அந்த வகையில் சிதம்பரம் மேல வீதி உள்பட 4 வீதிகளிலும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், கடுயைான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாலையில் கொட்டிய மழை
இந்த சூழ்நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் வானிலையில் தலைகீழனா மாற்றங்கள் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து, இருள் நிறைந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் காலையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த கடைவீதிகள் அனைத்தும் மாலையில் வெறிச்சோடின.
தொடர்ந்து, மழை தூரலாக நீடித்ததால் குறைந்த அளவிலான மக்கள் கடைகளுக்கு வந்து சென்றதை பார்க்க முடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை, வெயில் என்று இருவேறு பருவ நிலை மாறிமாறி வருவதால், தொடர்ந்து 3 நாட்களுக்கு மேலாக தீபாவளி பண்டிகை கால வியாபாரம் பாதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தொடர் மழையால், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்க தொடங்கி உள்ளது. பருவமழை இன்னும் தீவிரம் அடையும் நிலையில் நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உருவாகி இருக்கிறது. இதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று குடியிருப்பு வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story