ராமநத்தம் அருகே கழிவுநீர் கால்வாய்க்கு மாலை அணிவித்து போராட்டம்
ராமநத்தம் அருகே சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி கால்வாய்க்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநத்தம்,
ராமநத்தத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழ் சென்னை மார்க்கமாக செல்லும் இணைப்பு சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கியது.
இதை அகற்றுவதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கால்வாயின் மேல் உள்ள மூடியை நெடுஞ்சாலை ஊழியர்கள் அகற்றினர். ஆனால் கழிவுநீரும் அகற்றப்படவில்லை. கால்வாயையும் மூடப்படாததால் கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறினார். ஆனால் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர் கால்வாய்க்கு மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றினர். பின்னர் கழிவுநீரை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் உயிர் சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story