1 முதல் 8-ம் வகுப்புகள் தொடங்கியது; தாரை, தப்பட்டை முழங்க மாணவ-மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்
19 மாதங்களுக்கு பிறகு வகுப்புகள் திறக்கப்பட்டதால் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை தாரை, தப்பட்டை முழங்க பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கரூர்,
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதாக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தநிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கரூரில் 19 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவர்கள் காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு வரத்தொடங்கினர். சில இடங்களில் தாரை, தப்பட்டை முழங்க மாணவ-மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். முகக்கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு பள்ளியிலேயே முகக்கவசம் வழங்கப்பட்டது.
ஒப்புதல் கடிதம்
தொடர்ந்து தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தனர். மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதத்தில் கையொப்பம் பெறப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடவூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சி செட்டியபட்டி தொடக்கப்பள்ளியில் மின் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் தங்களுடைய குழந்தைகளுக்கு முத்தம் வழங்கி பள்ளி வளாகத்திற்குள் அனுப்பி வைத்தனர். அங்கு தயாராக நின்றிருந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் இன்முகத்துடன் வரவேற்று அழைத்து சென்று வகுப்பறையில் அமர வைத்தனர்.
அரவக்குறிச்சி, லாலாபேட்டை
அரவக்குறிச்சி பகுதியில் மாணவ- மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மலைக்கோவிலூர் அருகே உள்ள மூலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதேபோன்று அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
லாலாபேட்டையில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை வரவேற்கும் பொருட்டு பள்ளி வளாகம் முன்பு வண்ண மலர்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். இதில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தனர்.
தோகைமலை, குளித்தலை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். மேலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களுக்கு சளி, இருமல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மலர்தூவி மாணவ-மாணவிகளை வரவேற்றனர்.குளித்தலை நகரம் மற்றும் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ- மாணவிகளின் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்ட பின்னரே அவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் குளித்தலை அருகே உள்ள ஆதிநத்தம் ஊராட்சி பள்ளிக்கு சென்ற குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர்களுக்கு இலவசமாக தேர்வு அட்டைகள், பென்சில், பேனா போன்ற பொருட்களையும், இனிப்புகளையும் வழங்கினார்.
வெள்ளியணை
வெள்ளியணை பகுதியிலுள்ள அரசு தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு, பூங்கொத்து, பூக்கள், குங்குமம், சந்தனம் கொடுத்து வரவேற்றனர். வெள்ளியணை அரசு தொடக்க பள்ளியில் உடல் வெப்ப பரிசோதனை செய்து சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இந்த பள்ளியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி பார்வையிட வந்தார். அப்போது அவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்புகளை வழங்கி நெற்றியில் சந்தனம் குங்குமம் இட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது வட்டார கல்வி அலுவலர் ரமணி, தலைமையாசிரியர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர்கள் என பலரும் உடனிருந்தனர்.
நொய்யல்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த அனைத்து மாணவ- மாணவிகளும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். வகுப்பறையில் சமூக இடைவெளி விட்டு அமர வைத்து அவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. முன்னதாக பள்ளிகளுக்கு வந்த 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு தாரை, தப்பட்டை முழங்க அழைத்துச்சென்று மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.
க.பரமத்தி
க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் வந்தனர். இவர்களை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ பூங்கொத்து மற்றும் பிஸ்கெட் கொடுத்து வரவேற்றார். பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. தானியங்கி சானிடைசர் வழங்கும் எந்திரம் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக வண்ண பலூன்கள், வாழைமரம் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கார்ட்டூன் கதாபாத்திரங்களில் வரும் கதாநாயகர்கள் போல வேடமணிந்து ஆடிப்பாடி மாணவர்களை மகிழ்வித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நெடுங்கூர் கார்த்தி, வட்டார கல்வி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூரில் 1,062 பள்ளிகள் திறப்பு
காளியப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்த 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் இனிப்புடன் மலர்கொத்து கொடுத்து பள்ளிக்கு வரவேற்றார். பின்னர், மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர் கொரோனா தொற்று குறித்தும், தடுப்பூசி குறித்தும் எழுப்பிய கேள்விகளுக்கு அனைவரும் உடனுக்குடன் பதிலளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் 820 அரசு பள்ளிகளும், 51 நிதி உதவி பெறும் பள்ளிகளும், 9 பகுதி உதவிபெறும் பள்ளிகளும், நிதியுதவி பெறும் பள்ளிகளும், 182 தனியார் பள்ளிகளும் என 1,062 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 853 மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளிகளில் கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியில் அமர்வது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டி நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.முதல்-அமைச்சர் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது நமது கடமையாகும் என்று அறிவுறுத்தியதின் அடிப்படையில், அனைத்துப்பள்ளிகளிலும் குழந்தைகளை வரவேற்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. மழலை மாணவ-மாணவியர்களை உளவியல் ரீதியாக சரி செய்திடும் வகையில் முதல் இரு வாரங்களுக்கு குழந்தைகளுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்றவற்றை வகுப்பறையில் ஆசிரியர்கள் செயல்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளி நுழைவுவாயிலில் மாணவர்களுக்கு கேக், சாக்லெட், பேனா, பென்சில், பூ புத்தகம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் மாணவர்களை பூக்களை தூவியும் வரவேற்றனர். மாணவர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி வந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
அதேபோல் பெரும்பாலான மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்ததை காணமுடிந்தது. அனைத்து பள்ளிகளிலும் சுழற்சி முறையில் வகுப்பறைகள் நடைபெறுவதால், ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆசிரியர்கள் கொரோனா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story