வேலூர் வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


வேலூர் வந்த மு.க.ஸ்டாலினுக்கு  உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 12:22 AM IST (Updated: 2 Nov 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வேலூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாலாஜா

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வேலூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் வருகை

வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சுமார் 220 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டும் திட்ட பணிகள் தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் நடக்கிறது. 
இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் வேலூருக்கு புறப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட்டுக்கு இரவு 8.45 மணியளவில் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு

 தி.மு.க. மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், டி.ஐ.ஜி. பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவிகள் பரதநாட்டியமாடி புத்தகம் கொடுத்து வரவேற்றனர். மேலும் மேளதாளம், நாதஸ்வரம், சண்டி மேளம், வாணவேடிக்கையுடன், பெண்கள் கும்ப மரியாதை வழங்கி, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோரும்  மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வரவேற்றனர்.

புகைப்படம் எடுத்தனர் 

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொது செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் அசோகன், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷாவெங்கட், முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ஏ.கே.முருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பரதநாடிய மாணவிகள் முதல்-அமைச்சர்  ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் வரவேற்பு அளிக்க ஏராளமான தி.மு.க.வினர் குவிந்திருந்தனர். மாலை 9.10 மணி அளவில் அங்கு வந்த அவரை வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், கதிர்ஆனந்த் எம்.பி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உள்பட ஏராளமான தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் வேலூர் சுற்றுலா மாளிகைக்கு 9.30 மணி அளவில் வந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல உள்ளார். இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story