வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 2 Nov 2021 12:54 AM IST (Updated: 2 Nov 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் வெளியிட்டார். இந்த பட்டியலின் படி ஆண்களைவிட பெண் வாக்காளர் அதிகமாக உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் வெளியிட்டார். இந்த பட்டியலின் படி ஆண்களைவிட பெண் வாக்காளர் அதிகமாக உள்ளனர்.

 வரைவு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் வாக்காளர் பட்டியலை வெளியிட, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் பெற்றுக்கொண்டார். 

இந்த வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 16 ஆயிரத்து 672 ஆண்கள், 10 லட்சத்து 60 ஆயிரத்து 436 பெண்கள், 90 மூன்றாம் பாலினத்தவர்கள் என 20 லட்சத்து 77 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதிக்கு பின்னர் படிவம் வரப்பெற்றதில் புதிதாக 5,44 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

 சுருக்கமுறை திருத்தம்

மேலும் https;//www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்து கொள்ளலாம். வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடைபெற உள்ளது.

இதில், 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுடைய நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் இடமாற்றம், பிழைத்திருத்தம், பெயர் நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். 

வருகிற 13, 14 மற்றும் 27, 28-ந்தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அங்கு தேவையான படிவங்களை பெற்று உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். 

இதன் மூலம் பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story