மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: நெல்லையில் கலெக்டர் கார் முன்பு மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்டார்.


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: நெல்லையில் கலெக்டர் கார் முன்பு மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்டார்.
x
தினத்தந்தி 2 Nov 2021 1:15 AM IST (Updated: 2 Nov 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கலெக்டர் கார் முன்பு மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்டார்.

நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகளுக்கு தீர்வு காண உத்தரவிட்டார்.

நெல்லை மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் அனிதா நாச்சியார், நடிகர் அஜய் நற்பணி மன்ற இளைஞர் அணி தலைவர் பாலு மற்றும் திம்மராஜபுரம் பகுதியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் 11-வது வார்டு காந்தி தெருவில் பாதாள சாக்கடை உடைந்து தெருவுக்குள் ஆறுபோல் கழிவுநீர் ஓடுகிறது. மேலும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டு 1 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. அந்த பகுதியில் சாக்கடையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக இவற்றை சீரமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் கார் முன்பு நாஞ்சான்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகன் (வயது 33) என்பவர் தனது வாகனத்துடன் நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக்கண்ட போலீசார் அங்கு விரைந்து வந்து முருகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கு ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை தராமல் இழுத்தடிக்கிறார்கள். தொடர்ந்து இதற்காக முயற்சிகள் மேற்கொண்டும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

அப்போது போலீசார் அவரிடம், நீங்கள் மது குடித்திருப்பதால் கலெக்டரை சந்திக்க அனுமதிக்க முடியாது, தங்களது கோரிக்கை மனுவை மறுநாள் கொண்டு வந்து கலெக்டரிடம் கொடுக்குமாறு கூறினர். ஆனாலும் அவர் கலெக்டரை பார்க்க வேண்டும், இல்லாவிட்டால் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்வேன், என்றார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
நேற்று தொடர் மழை காரணமாக மனு கொடுக்க குறைவான மக்களே வந்திருந்தனர்.

Next Story