பிரசவித்த பெண் திடீர் சாவு
தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீரென இறந்ததால் கைக்குழந்தையுடன் வந்து தந்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீரென இறந்ததால் கைக்குழந்தையுடன் வந்து தந்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
பிரசவம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள இளங்கார்குடியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 39). இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி(34). இவர்கள் இருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்த லட்சுமி பிரசவத்திற்காக கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சாவு
அதன்பிறகு லட்சுமியை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். லட்சுமி உடல்நிலை எப்படி இருக்கிறது என உறவினர்கள் கேட்டபோது, லட்சுமிக்கு மஞ்சள் காமாலை இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து 17 நாட்கள் கழித்து லட்சுமியை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி லட்சுமி வீட்டிற்கு தாமாகவே வந்த 3 நர்சுகள் மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து 18-ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந் தேதி லட்சுமி இறந்தார்.
கலெக்டரிடம் மனு
இந்த நிலையில் இறந்த லட்சுமியின் கணவர் விஜயகுமார் தனது கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.. அந்த மனுவில், இறந்த லட்சுமியின் உடலை கொடுப்பதற்கு முன்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், வலுக்கட்டாயமாக லட்சுமியின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் கோர்ட்டுக்கு செல்லமாட்டோம் என எழுதி வாங்கி கொண்டனர். அதன்பிறகு தான் உடலை ஒப்படைத்தனர்.
தவறான சிகிச்சையால் தான் லட்சுமி இறந்தார். ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் ஏதோ ஊசி போல் பொருட்கள் இருப்பது தெரிகிறது. எனவே லட்சுமியின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story