அகில இந்திய அளவில் 43-வது இடம் பிடித்து தஞ்சை மாணவர் சாதனை


அகில இந்திய அளவில் 43-வது இடம் பிடித்து   தஞ்சை மாணவர் சாதனை
x
தினத்தந்தி 2 Nov 2021 1:58 AM IST (Updated: 2 Nov 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 43-வது இடம் பிடித்து தஞ்சை மாணவர் அரவிந்த் சாதனை படைத்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பால் தான் இந்த அளவிற்கு தன்னால் வெற்றி பெற முடிந்தது என பெருமிதம் தெரிவித்தார்.

தஞ்சாவூர்:
நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 43-வது இடம் பிடித்து தஞ்சை மாணவர் அரவிந்த் சாதனை படைத்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பால் தான் இந்த அளவிற்கு தன்னால் வெற்றி பெற முடிந்தது என பெருமிதம் தெரிவித்தார். 
43-வது இடம் பிடித்த தஞ்சை மாணவர்
நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் அகில இந்திய அளவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரமணி நகரை சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர் ராமச்சந்திரன் மகன் அரவிந்த் என்பவர் 710 மதிப்பெண் பெற்று 43-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதை அறிந்த அரவிந்த் மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
மன அழுத்தம் இன்றி...
நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து மாணவர் அரவிந்த் கூறியதாவது:-
நீட் தேர்வுக்கு என்று தனியாக பயிற்சி வகுப்பு எதிலும் படிக்கவில்லை. ஆனாலும் 11-ம் வகுப்பு முதலே பள்ளியில் பயிலும்போது நீட் தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் மற்றும் கையேடுகளை வாங்கி அதனை தொடர்ந்து படித்து வந்தேன்.
மன அழுத்தம் இன்றி படித்ததுதான் எனது வெற்றிக்கு காரணம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் யாரும் குறைந்த மதிப்பெண் எடுத்தபோது கூட என்னை எதுவும் பேசியது கிடையாது. எந்த ஒரு மன அழுத்தமும் கொடுத்ததும் கிடையாது. என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பதே எனது பெற்றோரின் எண்ணமாக இருந்தது. அதன்படி நீட் தேர்வுக்கான அடிப்படை கல்வியில் இருந்து பள்ளியில் பயிலும்போதே படித்தேன்.
மாதிரி தேர்வு
மேலும் நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வில் அதிக அளவு ஈடுபடுத்திக்கொண்டு அடிக்கடி தேர்வு எழுதியது வெற்றிக்கு முதல் காரணம்.  கடைசி நேரத்தில் முயற்சி செய்யக்கூடாது. மற்றவர்கள் சொன்னார்கள் என்றும் படிக்கக் கூடாது. நாம் டாக்டர் என்று நினைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள், ஒத்துழைப்பால் இந்த நிலையை எட்ட முடிந்தது.
தற்போது அகில இந்திய அளவிலான இடம் மட்டுமே தெரிந்துள்ளது. தமிழக அளவில் தெரிய வேண்டும் என்றால் முழு விவரமும் தெரிய வேண்டும். தமிழக அளவில் அதிக மதிப்பெண் பெற்றவனாக நான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story