மாவட்டத்தில் 38 டாஸ்மாக் பார்கள் திறப்பு


மாவட்டத்தில் 38 டாஸ்மாக் பார்கள் திறப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 2:07 AM IST (Updated: 2 Nov 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 38 டாஸ்மாக் பார்கள் திறப்பு

சேலம், நவ.2-
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டத்தில் 38 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன.
டாஸ்மாக் பார்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன. அதேநேரத்தில் இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் 218 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 61 கடைகளில் மட்டும் பார் வசதி இருந்தது. ஆனால் கடை வாடகை பிரச்சினை, வைப்பு தொகை, ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் 38 டாஸ்மாக் பார்கள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன.
மது பிரியர்கள் மகிழ்ச்சி
சேலம் மாநகரில் நேற்று காலை 10 மணிக்கு பார்களை திறப்பதற்கு முன்பாக அதன் உரிமையாளர்கள் திருஷ்டி பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்தனர். மேலும் மது பிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. 
பின்னர் அவர்கள் பாரில் உள்ள இருக்கையில் ஹாயாக அமர்ந்து மது அருந்தியதை காணமுடிந்தது. டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் டாஸ்மாக் பார்கள் திறக்கலாம் என்று அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாரில் மது அருந்த வருவோர் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். கைகள் கழுவுவதற்கு தண்ணீர் வைத்திருக்க வேண்டும். பார் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்திருக்க வேண்டும். 
குறைந்தபட்சம் 6 அடி வீதம் மது பிரியர்கள் இடைவெளி விட்டு அமர்ந்து மது அருந்த அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அரசின் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து டாஸ்மாக் பார்களில் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story