வன்னியர் இடஒதுக்கீடு ரத்து ஏமாற்றம் அளிக்கிறது


வன்னியர் இடஒதுக்கீடு ரத்து ஏமாற்றம் அளிக்கிறது
x
தினத்தந்தி 2 Nov 2021 2:07 AM IST (Updated: 2 Nov 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து ஏமாற்றம் அளிக்கிறது

சேலம், நவ.2-
வன்னியர் இடஒதுக்கீடு ரத்து ஏமாற்றம் அளிக்கிறது என்று சேலத்தில் சீமான் கூறினார்.
தமிழக பெருவிழா
சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு தினம், தமிழக பெருவிழா சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் தங்கதுரை முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். மேலும் தமிழ்நாடு தினம் உறுதிமொழி  எடுத்துக்கொண்டனர்.
குழப்பதை ஏற்படுத்தும்
முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு தினத்தை நவம்பர் 1-ந்தேதி தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம். 1967-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி தமிழ்நாடு மாநிலமாக பிரிக்கப்பட்ட நாள். தமிழ்நாடு என்ற பெயர் அறிவிக்கப்பட்டது ஜூலை மாதம் 18-ந்தேதி. தமிழக அரசு தற்போது ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு அவசியமற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
ம.பொ.சிவஞானம், சி.பா. ஆதித்தனார் ஆகியோர் தமிழர்களுக்கு தமிழ்நாடு என்ற பெயரோடு தனி மாநிலம் வேண்டும் என்று போராடினார்கள். சங்கரலிங்கனார் கடந்த 27.7.1956-ல் இதே கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை பட்டினி போராட்டம் நடத்தி உயிர்நீத்தார். 1967-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ல் சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்று தீர்மானத்தை அண்ணா நிறைவேற்றினார்.
எதிர்க்கிறோம்
எனவே மாநிலம் பிரிக்கப்பட்ட நாள் நவம்பர் 1-ந்தேதி. பெயர் சூட்டப்பட்ட நாள் ஜூலை 18-ந்தேதி. பிறந்த நாளை, பிறந்த நாளாக கொண்டாடுவோமா? பெயர் வைத்த நாளை கொண்டாடுவோமா?.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது நவம்பர் 1-ந்தேதியை தமிழ்நாடு தினமாக எழுச்சியாக கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார். ஆளும் கட்சியானபிறகு ஜூலை மாதம் 18-ந்தேதியை கொண்டாடுவோம் என்று கூறுகிறார். இதை எதிர்க்கிறோம்.
ஏமாற்றம் அளிக்கிறது
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து என்ற உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது. மொழி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வேண்டும். சாதி வாரி எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை சரியாக பிரித்து தரவேண்டும் என்பது எங்கள் நோக்கம். 
மத்திய அரசு பொது சொத்துகளை தொடர்ந்து தனியார் மயமாக்கி வருவதன் காரணமாக வரும் காலங்களில் இந்தியா என்பது பெயர் அளவில் தான் இருக்கும். பொது சொத்துகளை தனியாரிடம் விற்பனை செய்வதால் இந்தியா தனியார் வசம் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story